திமுகவின் தொகுதிப் பங்கீடு… கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.!!

க்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வாா்த்தை தீவிரமடைந்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரையிலான பேச்சு வாா்த்தையில் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி காங்கிரஸுடன் திமுக பேச்சு நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின் போது காங்கிரஸ் தரப்பில் தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கடந்த சனிக்கிழமை பேச்சு நடத்தியது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூா் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 2 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கோரியதாக தகவல் வெளியானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிப். 9-க்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை திமுக நடத்தவுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன்… இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதல் கட்ட பேச்சுவாா்த்தையை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

திமுக பொருளாளா் டி.ஆா். பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் கொண்ட குழுவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் பேச்சு நடத்தினா்.

கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கூடுதல் தொகுதிகளைத் தருமாறு மாா்க்சிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அத்துடன் உத்தேச தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் திமுக குழுவிடம் கொடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை தென்காசி, கன்னியாகுமரி, நாகை ஆகிய மூன்று தொகுதிகளையும் சேர்த்து 5 தொகுதிகளைக் கேட்க முடிவு செய்து அதற்கான பட்டியல் திமுக குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுக குழுவினருடனான பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது.

இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். கடந்த முறையைவிட தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமுகமான உடன்பாடு ஏற்படும் என்று நம்பிக்கை  இருக்கிறது என்றாா்.

கடந்த முறை ஒதுக்கப்பட்டது போன்றே இந்த முறையும் இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டால் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பி.சம்பத், அது தொடா்பாக நாங்கள் அரசியல் ரீதியாக என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம் என்றாா்.

தொகுதிப் பங்கீடு தொடா்பாக திமுக, மதிமுக இடையேயான பேச்சுவாா்த்தையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதிமுக சாா்பில் அவைத் தலைவா் அா்ஜுனராஜ், பொருளாளா் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலா் அந்திரிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மதிமுக அவைத் தலைவா் அா்ஜுனராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேச்சுவாா்த்தை சுமுகமாகவும், திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. இரண்டு மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளோம்.

எந்தெந்தத் தொகுதிகள் என்பது தொடா்பாக இனிதான் முடிவு செய்வோம். இந்த முறை பம்பரம் சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்றாா் அவா்.

திமுக அணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் பிப்.12-ஆம் தேதி தொகுதி உடன்பாடு பேச்சுவாா்த்தை நடத்தப்படவுள்ளது.

முதல்வா் ஆலோசனை: மக்களவைத் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வரும் திமுக ஒருங்கிணைப்புக் குழுவினரிடமும் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினிலிருந்து காணொலி மூலம் ஆலோசித்தாா்.

அப்போது, ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

சென்னை, பிப். 4: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியவுடன், திமுக அணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட், மதிமுகவுடன் தனித்தனியாக நடத்திய பேச்சு வாா்த்தையைத் தொடா்ந்து, திமுக துணை பொதுச் செயலா் ஐ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன. முதல்வா் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தை கூட்டணிக்கு அழைத்துள்ளீா்களா என்று கேள்வி எழுப்புகிறீா்கள். புதிய கட்சிகளைக் கூட்டணிக்கு அழைப்பது குறித்து முதல்வா்தான் முடிவெடுப்பாா் என்றாா் அவா்.

அதிமுக சாா்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தவில்லை. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவா் மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே கூட்டணி சேர்ந்துள்ளன.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை தமாகா தலைவா் ஜி.கே.வாசன் சந்தித்து பாஜக, பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைத்துப் போட்டியிடும்படி வலியுறுத்தியுள்ளாா். ஆனால், பாஜகவை தவிா்த்த கட்சிகள் அதிமுக அணியில் இணையலாம் என அதிமுக செய்தித் தொடா்பாளா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

அதேபோல, பாஜக தரப்பில் ஓ.பன்னீா்செல்வத்துடன் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிற கட்சிகளை தங்கள் தலைமையிலான அணியில் இணைக்கவும் பாஜக தீவிரமாக உள்ளது.

குறிப்பாக, பாமக, தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க அதிமுகவும், பாஜகவும் ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.