கோவை ரயிலை கவிழ்க்க சதி..? வடமாநில வாலிபர் 3 பேர் கைது..!!

கோவை போத்தனூர் வழியாக நேற்று முன் தினம் அதிகாலையில் கேரளாவை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈச்சனாரி ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றபோது அதன் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அந்த இன்ஜின் டிரைவர் உடனே இது குறித்து போத்தனூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அந்த ரயில் சென்றதும் அந்த தண்டவாளத்தில் மற்றொரு கேரள எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது அந்த ரயில் சென்ற தண்டவாளத்திலும் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த ரயில் கற்களை உடைத்து தூள் தூளாக சிதறடித்து விட்டுசென்றது. இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த போத்தனூர்ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தண்டவாளத்தின் அடுத்தடுத்து கற்கள் வைத்திருந்ததால் ரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமா? என்றகோணத்தில்போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர் .அப்போது அந்த பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 3 பேருக்கு கேரள ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்தது ரயில்வே போலீசருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் .அதில் அவர்கள் உத்தரபிரதேசச் சேர்ந்த பப்லு (வயது 31 )ராகேஷ் ( வயது 21) சுகல்(வயது 19) என்பது தெரிய வந்தது .மேலும் நடந்த விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்த ஆத்திரத்தில் ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கற்களை வைத்தது தெரியவந்தது. தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி திட்ட சம்பவம்கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.