திமுக-விசிக உறவில் பிளவு ஏற்படுத்த சதி திட்டம் .. திருமாவளவனின் பரபரப்பு ட்விட்..!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நினைவு அரங்கம் சிதம்பரத்தில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்திகளை சந்தித்த அவரிடம் வேங்கைவையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்தார். அதற்கு செய்தியாளர் ஒருவர் “திமுகவினர் போன்று பேசுகிறீர்களே” என திருமாவளவனின் நோக்கி கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனால் ஆவேசமடைந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பை பாதியில் முடித்துக் கொண்டு அவசரமாக கிளம்பி சென்றார். இந்த நிலையில் திருமாவளவன் தனது பீட்டர் பக்கத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி குறித்து பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் அந்த பதிவில் வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தனமையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது.

திமுக – விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ;

விசிக’வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ;

விசிக’வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ;

விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ;

திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செயவதோ;

அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்ட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான். இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்.” என பதிவிட்டுள்ளார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வாக்குவாதம் செய்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திருமாவளவனின் இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.