மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு.. மீண்டும் இந்து முன்னணி பிரமுகர் வீடு மீது கல்வீச்சு,கார் கண்ணாடி உடைப்பு-போலீசார் குவிப்பு..!!

கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் மீது கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது. இதனால் கோவையில் ஒருவித பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவையில் வெளிமாவட்டங்கள் மற்றும் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் இந்து முன்னணி பிரமுகர் வீடு மீது கல்வீசி, கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் இந்து முன்னணி நகர பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இன்று காலை அவர் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.மேலும் வீட்டின் கண்ணாடியும் உடைந்து துகள்கள் சிதறி கிடந்தது. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சிலர் இவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான ஹரிஷ் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சேதம் அடைந்த கார் மற்றும் வீட்டினை பார்வையிட்டு ஹரிசிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிசின் வீடு மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் நள்ளிரவில் யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துள்ளனரா? என்பது குறித்து ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் கல்வீச்சு சம்பவம் நடந்த தகவல் அறிந்ததும் ஏராளமான இந்து முன்னணியினர் ஹரிசின் வீட்டின் முன்பு குவிந்தனர். மேலும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமும் சம்பவம் நடந்த ஹரிசின் வீட்டிற்கு செல்கிறார். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு, கார் கண்ணாடி உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து இன்று மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.