கோவை அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு தாய்ப்பால் வங்கிக்கு 2344 போ் தாய்ப்பால் தானம்- பயனடைந்த 5,511 குழந்தைகள்..!!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.

இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப்பால் தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கையும், பயனடைபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா். இதன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இந்த தாய்ப்பால் வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான, ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:-
கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தாப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் பராமரிக்கப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
தனியாா் ஆஸ்பத்திரிகளில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மாா்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது. மேலும், தனியாா் ஆஸ்பத்திரிகளில் பிரசவமாகி தாய்ப்பால் பற்றாக்குறை காணப்படும் குழந்தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப்பால் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.