மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

திமுக தொண்டர் நரேஷ் குமாரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பிரமுகர் நரேஷ் குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் அவரை அடித்து அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து நரேஷ்குமார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமாரை கடந்த 21ம் தேதி போலீசார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து, கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தரப்பில் வாதிட்ட போதிலும், அவருக்கு ஜாமீன் தர சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை அடுத்து, அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிபந்தனையோடு விடுவித்துள்ளார்.