சட்ட விரோதமாக 200 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக எழுந்த புகார் : சென்னையில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..!!

சென்னை : சென்னையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் எழுந்துள்ள புகாரில் காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தனியார் ஸ்கேன் மையத்தின் கிளைகள் சென்னையில் உள்ள வேளச்சேரி, நங்கநல்லூர், வடபழனி, பாடி உட்பட 20 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அங்கு மெடிக்கல் லேப்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், ஸ்கேன் மையத்தில் கார்ப்பரேட் அலுவலகம், அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றன. இந்த ஸ்கேன் மையங்களில் சட்ட விரோதமாக 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சோதனை முடிந்த பிறகு வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத முதலீடு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.