கோவை வேளாண் பல்கலைக்கழகத்தி கோலாகலமாக நடைபெற்ற பருத்தித்‌ துறையின்‌ நூற்றாண்டு விழா..!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தித் துறையானது கடந்த 1922ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதுவரை 17 காஸிபியம் ஹிருகூட்டம், 1 காஸிபியம் பார்படென்ஸ் மற்றும் 1 வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பருத்தித் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் சங்கம் இணைந்து “நூற்றாண்டு புகழ்பெற்ற பருத்தி ஆராய்ச்சி மற்றும் எதிர்கால திட்ட வழிகள்” பற்றிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு கடந்த அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவினை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் முனைவர் இரா.ரவிகேசவன் வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன், தேசிய கருத்தரங்கத்தின் “பருத்தி ஆராய்ச்சி”: புத்தகத்தை வெளியிட்டு துவக்க உரையை வழங்கினார்.

அவர் தம் உரையில், நூற்றாண்டு காணும் பருத்தி துறைக்கு வாழ்த்து தெரிவித்து பருத்தி பயிரின் முக்கியத்துவம் மற்றும் பருத்தி உற்பத்தியில் உயர் விளைச்சல் ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் அதிக பூக்கிளைகள், அதிக பருத்தி காய்கள் கொண்டதும், அடர் நடவு மற்றும் இயந்திர அறுவடைக்கு ஏற்ற இரகங்களை உருவாக்குவதன் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என வலியுறுத்தினார். இதனையடுத்து தலைமை உரை வழங்கிய மத்திய பருத்தி ஆராயச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ஒய்.ஜி.பிரசாத், பருத்தி சாகுபடியில் இந்தியாவின் சாதனைகள் பற்றியும் நீண்ட இழைப் பருத்தி ரகங்களான எம்.சி.யு. 5, சுவின், சுரபி, சுமங்கலா மற்றும் சூரஜ் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். மேலும் மரபணு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பருத்தியில் மககசூலை அதிகரிக்க வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய பருத்தி அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.எச். பிரகாஷ், தனது சிறப்புரையில் இதுவரை பருத்தி துறையில் இருந்து வெளியிடப்பட்ட பிரபலமான ரகங்கள் குறித்தும், குறிப்பாக கோ.17 ரகத்தின் சிறப்பியல்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர் ந.செந்தில், தாவர பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் முனைவர் எம். சாந்தி மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மைய இயக்குநர் முனைவர் டி. சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் தங்கள் உரையில், களைக்கொல்லியை தாங்கும் ரகங்கள், கரிம பருத்தி, தாவர பாதுகாப்பு தொழில்நுட்ப மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப தடைகளுக்கான தீர்வுகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

இறுதியாக பருத்தி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சி.ராஜேஸ்வரி நன்றியுரை வழங்கினார். இந்த நூற்றாண்டு விழாவில் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் நாட்டின் மத்திய நிறுவனங்களின் பருத்தி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.