செப்.2 முதல் INS விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க் கப்பல்… இந்தியக் கடல் எல்லை ஆதிக்கம் செலுத்த வந்துவிட்டது..!!

ந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் நாட்டிற்கான அர்ப்பணிப்பிற்குத் தயாராகியுள்ளது.

இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

இந்தியாவின் பாதுகாப்புப் படை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தரை வழியாக வரும் ஆபத்துக்களை தரைபடையினரும், வான் வழியாக வரும் ஆபத்துக்களை விமானப் படையினரும், கடல் வழியாக வரும் ஆபத்தைக் கப்பல் படையினரும் தடுப்பார்கள். இந்தியாவின் கப்பல் படை இந்தியா சுதந்திரம் பெற்றது முதலே வலுவாகிக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் உலகின் பலமான கடற்படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இப்படியாக இந்தியாவைப் பாதுகாத்ததில் முக்கியமான கப்பல் INS விக்ராந்த், இந்த கப்பல் முதன் முறையாக 1961ம் ஆண்டு இந்தியாவின் கடலை பாதுகாக்கும் பணிக்காக இறக்கிவிடப்பட்டது. இந்த கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அல்லது 1945ம் ஆண்டு இங்கிலாந்து அரசு இந்த கப்பலைத் தயாரித்தது. ஆனால் எந்த பணிக்காகவும் இதைப் பயன்படுத்தவில்லை. 1957ம் ஆண்டு இந்த கப்பலை இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசு விற்பனை செய்துவிட்டது.

1961 முதல் 1997 வரை இந்த கப்பல் இந்தியக் கடலை பாதுகாத்து வந்தது. இந்த கப்பலின் துணை பெயர் சமஸ்கிருதத்தில் ஜெயமா சாம்யுக்தி ஸ்பா்த்தா என வைத்துள்ளனர். அதற்கு அர்த்தம் எதிர்பவர்களை அடியோடு அழிப்பவன் எனப் பொருள். அதற்குத் தகுந்தார் போல இந்த கப்பல் 1971 இந்தியப் பாகிஸ்தான் போரில் இந்த கப்பல் எதிரிகளுக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்தது. பல நேரங்களில் எதிரிகளின் திட்டங்களை எல்லாம் முறியடிந்தது. இந்த கப்பலைப் பார்த்து எதிரிகள் பயந்து நடுங்கினர்.

இந்நிலையில் 1997ம் ஆண்டு இந்த கப்பல் தனது பணியை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது. இந்நிலையில் 2014ம் ஆண்டு இந்த கப்பலை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஸ்கிராப்பாக இதன் உதிரிப் பாகங்களை மற்ற பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்த ஸ்கிராப்களை வைத்துத் தான் பஜாஜ் நிறுவனம் விக்ராந்த் பைக்கை தயாரித்ததாகக் கூறியது. இந்த கப்பல் தான் இந்தியாவின் முதல் விமானத்தைத் தாங்கி செல்லும் போர்க் கப்பலாகும்.

இந்நிலையில் இந்தியக் கப்பல் படை மீண்டும் இந்தியாவிற்கான விமானம் தாங்கிய போர்க் கப்பலை முழுமையாக இந்தியாவிலேயே தயார் செய்ய முடிவு செய்தது. இதற்காகக் கடந்த 2007ம் ஆண்டு இந்தியக் கப்பற்படைக்கும் கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 2009ம் ஆண்டு இந்த கப்பல் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் சுமார் 13 ஆண்டுகள் கழித்து இந்த கப்பல் தற்போது தயாராகிவிட்டது. இதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த கப்பல் தற்போது நாட்டிற்காக அர்ப்பணிக்கத் தயாராகவுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது விமானம் தாங்கி போர்க் கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கும் INS விக்ராந்த் என்ற பெயரையே வைத்துள்ளனர். இந்த கப்பல் ரூ20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டுமானத்திற்கான ஒவ்வொரு பாகங்களும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்து தயாராகிக் கொண்டு வரப்பட்டது. இந்த கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பங்கும் இருக்கிறது.

இந்த கப்பல் 2300 கம்பார்ட்மெண்ட்களை கொண்டது. இதில் மொத்தம் ஒரே நேரத்தில் 1700 பேர் பயணிக்கலாம். இது மட்டுமல்ல இந்த கப்பலில் பெண் அதிகாரிகள் தங்கவும் அவர்களுக்கான பாதுகாப்பான இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் மொத்தம் 262 மீட்டர் நீளமு, 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கப்பலில் மொத்தம் 88 மெகாவாட் பவர் கொண்ட 4 கேஸ் டர்பைன்கள் உள்ளன. இது இந்த கப்பலை 28 நாட்ஸ் வேகத்தில் பயணிக்க வைக்கும்.

இதன் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் என்றாலும் வழக்கமான வேகம் என்பது 18 நாட்ஸ் வேகம். இது ஒரே ட்ரிப்பில் 7500 நாட்டுக்கல் மைல் தொலைவிற்குப் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பல் மொத்தம் 45000 டன் எடை கொண்டது. இதன் கட்டுமானம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே முடிந்துவிட்டது. அதன் பின்னர் சோதனைகள் நடந்து வருகிறது. கப்பல் படை சோதனை, விமானப்படை சோதனை எல்லாம் முடிந்து தற்போது இது நாட்டிற்காக அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டது.

தற்போது இந்தியாவில் INS விக்ரமாதித்யா என்ற கப்பல் தான் விமானம் தாங்கிய ஒரே போர்க்கப்பலாக இந்தியாவிடம் இருக்கிறது. இந்த கப்பலும் ரஷ்யாவில் கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த கப்பல் வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருக்கிறது. தற்போது கொச்சியில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளன ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க் கப்பலாகும்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை சொந்தமாக விமானம் தாங்கிய போர் கப்பல்களைச் சொந்தமாகத் தயாரித்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. உலகின் வெகு சில நாடுகள் மட்டுமே கொண்ட பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது பெருமை மிகுந்த விஷயமாகும்.

இந்த கப்பலில் மொத்தம் 30 போர் விமானங்களை நிறுத்த முடியும். MiG-29K ரக போர் விமானமும் இதில் அடக்கம். இது போக ஹெலிகாப்டர்களையும் இதில் இறக்க முடியும். இதில் போயீங் மற்றும் டசால்ட் விமானங்களையும் இதில் தரையிறக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சமீபகாலமாகச் சீனா தனது கடல் எல்லையை விஸ்தரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்காவில் அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி தனது நேவல் பேஸை ஏற்படுத்தியுள்ளது. அங்குத் தனது போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியக் கடல் எல்லையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தச் சரியான நேரத்தில் இந்தியா விக்ராந்த் கப்பலை உருவாக்கியுள்ளது.

இந்த கப்பலுக்கு வித்யாதார் ஹர்கே என்பவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கப்பல் செப் 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று முதல் தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும்.