கோவையில் உள்ள வ.உ.சி., உயிரியல் பூங்கா கடந்த, 1965ம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 1970-ல் சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன. பின்னர் அமைக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், விதிமுறைகளையும் கடுமையாக்கியது. அதன்படி, வ.உ.சி., உயிரியல் பூங்காவை மேம்படுத்துமாறு, ஆய்வு செய்த ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கடந்தாண்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
உயிரினங்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால், தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்திடம், வ.உ.சி., உயிரியல் பூங்காவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநகராட்சியும் கடிதம் எழுத, தலைமை வன உயிரின காப்பாளர், பூங்கா உயிரினங்களை இடமாற்ற, இரு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தார். இந்நிலையில், வேலுார், மசினகுடி அருகே மாயாறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில், 23 முதலைகள் விடுவிக்கப்படுகின்றன.கண்ணாடி விரியன் உட்பட, 34 பாம்புகள் வேலுார், கோவை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கும், 13 பெலிகான் பறவைகள் சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவுக்கும், 51 மான்கள் கோவையில் உள்ள வனப்பகுதிகளுக்கும் செல்கின்றன. ஆமைகள், கிளி, கழுகுகள், குரங்குகள் என, 250க்கும் மேற்பட்ட உயிரினங்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
பூங்கா இயக்குனர் சரவணன் கூறுகையில், ”இங்குள்ள உயிரினங்கள் சென்னை வண்டலுார், சத்தியமங்கலம், வேலுார் இடமாற்றம் செய்யப்படுகின்றன. நேற்று, இன்று பாம்புகள், குரங்குகள், முதலைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யும் பணி துவங்கியுள்ளது என்றார்.
“கண்கலங்க “பிரியா விடை!! கிளிகள் உள்ளிட்டவற்றுக்கு, 30 ஆண்டுகளாக உணவு படைத்த மாநகராட்சி பணியாளர்கள், அவை பிரிந்து செல்வதை தாங்க முடியாமல், கடைசியாக உணவு வழங்கினர். அவற்றை கூண்டுகளில் அடைத்து, வாகனங்களில் ஏற்றும்போது,கண்ணீர் விட்டு அழுதனர்..
Leave a Reply