கோவை, நீலகிரி தான் முக்கிய குறி… ஜே.பி. நட்டா வருகையால் பா.ஜ.க. உற்சாகம்..!

பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இப்போதே களமிறங்கி விட்டது.

பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் சென்று தேர்தல் பணியை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 27-ந் தேதி ஜே.பி. நட்டா தமிழகம் வருகை தந்தார். கோவையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அன்றைய தினமே தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஆளுங்கட்சியான தி.மு.க.வை கடுமையாக சாடினார். கட்டண உயர்வு, குடும்ப அரசியல், ஊழல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் முன் வைத்து பிரசாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் இந்த முறை அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் பாரதீய ஜனதா களமிறங்கி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளனர். அவ்வாறு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கொங்கு மண்டலத்தில் 2 தொகுதிகளை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று கோவை மற்றொன்று மலை மாவட்டமான நீலகிரி தொகுதி. நீலகிரி தொகுதியின் ஒரு பகுதி கோவை மாவட்டத்துக்குள் தான் வருகிறது. இங்குள்ள மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற இடங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவான இடங்களாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக இந்து அமைப்புகள் நடத்திய கடையடைப்பு போராட்டங்களில் நீலகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற இடங்களில் தான் முழு வெற்றி கிடைத்ததாக கணிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்து களமிறங்கியது. இதுவும் தங்களுக்கு கூடுதல் பலனை தரும் என பா.ஜ.க. நம்புகிறது. இதனால் இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதனை மையமாக வைத்தே ஜே.பி. நட்டாவின் பிரசாரம் கோவையில் தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகிரி தொகுதி எம்.பி.யாக தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் அவரே அங்கு போட்டியிட வாய்ப்புள்ளது.

இதனால் அவரை எதிர்த்து களம் காண பா.ஜ.க. நிர்வாகிகளில் பிரபலமான ஒருவரை போட்டியிடச் செய்வது எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கோவை தொகுதியிலும் மூத்த நிர்வாகிகளில் ஒருவரை களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை தொகுதியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் 2 முறை வெற்றி பெற்று எம்.பி.யாகி உள்ளார். கடந்த தேர்தலில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பி.ஆர். நடராஜனுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 92 ஆயிரத்து 7 வாக்குகள் வாங்கினார். மேலும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியும் தற்போது பா.ஜ.க. வசமாகி உள்ளது. இவற்றையெல்லாம் ஒரு சேர கணக்கு போட்டு பா.ஜ.க. கோவை தொகுதிக்கு காய் நகர்த்தி வருகிறது.

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கிச் சென்றுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெறக்கூடாது. குறைந்தது 50 சதவீத இடங்களையாவது பிடிக்கும் வகையில் கூட்டணி வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளையும், அதற்கான வலுவான வேட்பாளர்களையும் இப்போதே அடையாளம் காண வேண்டும், அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.