கொலை நகரமாகிக்கொண்டிருக்கும் கோவை: காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை- அண்ணாமலை டுவீட்..!

கோவையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்புத் தொடர்பாக ஆளும் தி.மு.க அரசுமீது தொடர்ச்சியாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்தவண்ணமே இருக்கின்றன.

இப்படியான சூழலில், கோவை நீதிமன்ற வளாகத்திலேயே இன்று காலை இளைஞர் ஒருவர், ஐந்துபேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை கொலை நகரமாகிக்கொண்டிருப்பதாகவும், சட்டம் – ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாசாரமும் தலையெடுத்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சட்டம், ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டுமொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற தி.மு.க அரசு.

உடனடியாக, முதல்வர் ஸ்டாலின், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் – ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.