ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

ரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 27-ந் தேதி அந்த தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 07ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடந்த 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது