கோவை இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை… 2 துப்பாக்கிகள்,5 தோட்டாக்களுடன் கைது..!

கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ரவுடி சத்தியபாண்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் .இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தனர் .மேலும் கோவை மாநகர பகுதியில் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 50க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் .அது போன்று சத்தியபாண்டி கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா என்பவரிடமிருந்து 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்து முன்னணி கோவை மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன் என்ற அயோத்தி ரவி (வயது 41)என்பவர் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் உதவி கமிஷனர் சதீஷ் மற்றும் போலீசார் கோவை புலியகுளத்தில் போலீஸ் நிலையம் அருகே மசால் லேஅவுட்டில் உள்ள அயோத்தி ரவி வீட்டுக்கு சென்றனர் .பின்னர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அயோத்தி ரவி வீட்டில் தான் இருந்தார். வீட்டில் அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது .இந்த சோதனையின் போது அவரது வீட்டில் 2 கை துப்பாக்கிகள் (பிஸ்டல்) 5தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் .அவரிடம் இந்த துப்பாக்கி எங்கிருந்து வாங்கியது? வாங்கி கொடுத்தது யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரித்தார்கள் . பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..