மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் போக்குவரத்து துறை ஊழியருக்கு வீடு ஒதுக்கிய கோவை மாவட்ட ஆட்சியர்.!!

மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் போக்குவரத்து துறை ஊழியருக்கு மாவட்ட ஆட்சியர் வீடு ஒதுக்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டுமனை பட்டா கேட்டு 6 மனுக்கள், இலவச வீடு கேட்டு 55 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 15 மனுக்கள் உள்பட 308 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் ஜியாவுல்லா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வீடு கேட்டு மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சமீரன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வீடு ஒதுக்கி கொடுத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.