கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை குனியமுத்தூர் கே. என். ஜி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்ற தேவராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில் மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளதாகவும், அதில் இயக்குனர்கள், மற்றும் பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் பணம் கொடுத்தனர்.இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 4 கோடியே 50 லட்சம் பணம் பெற்றுள்ளார். பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி தொடங்க எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை .இதனால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டனர், ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தவுடன் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுக்கொண்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளித்தனர் .இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ராஜு கரூரைச் சேர்ந்த அவரது நண்பரான மறைந்த சரவணபவன் என்பவருடன் இணைந்து ஒரு அறக்கட்டளையை போலியாக தொடங்கி அதில் தனது மகன் மகள் சரவணபவன் குடும்பத்தினர் உள்ளிட்ட வரை உறுப்பினராக சேர்த்து போலியாக பதிவு செய்ததும் போலீஸ் விசாரணையில் தேடிவந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பெற்று ராஜு வீட்டில் சோதனை செய்யப்பட்டது .இதில் வீட்டில் இருந்த ஆவணங்கள் , ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரொக்கபணம், 685 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பல்வேறு வங்கிகளில் ஆன்லைன் பணவர்தனை ஏடிஎம் மூலமாக கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் லட்சக் கணக்கில் நகைகள் வாங்கியதும் தெரிய வந்தது.இதற்கிடையே ராஜு மகன் நவீன் ( வயது 28 )இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவிபோலீஸ் கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் போலீசார் தலைமறைவாக இருந்த நவீனை நேற்று கைது செய்தனர். மேலும் நவீன் மோசடி பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பொதுமக்கள் யாரேனும் மேற்கண்ட நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் அது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்..இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.