தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்: கண்காணிப்பு பணி தீவிரம்- ராமேஸ்வரம் கடல் பகுதியில் பெரும் பதற்றம்..!

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது.

இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது. யுவான் வாங்க் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள யுவான் வாங் 5. கப்பலால் 750 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்க முடியும். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொடங்கி, கேரளா, ஆந்திரா வரை உளவு பார்க்க முடியும். இந்தநிலையில் தான் இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் ஹம்பந்தோட்டை துறைமுகம் உள்ளதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.