கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

ருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பிரியாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், பெற்றோரிடம் பிரியாவின் சாதனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கால்பந்து போட்டியில் பிரியா வாங்கி குவித்த பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து, அரசு அறிவித்திருந்தது போன்று, பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரியாவின் பெற்றோரிடம் வழங்கினார்.

மேலும், அரசு சார்பாக வீடு ஒதுக்கப்பட்டதற்கான அரசாணையையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவரது வீட்டில் இருந்த பிரியாவின் புகைப்படங்களை பார்த்து, அவருக்கு கால்பந்து மீது இருந்த ஆர்வம் மற்றும் குடும்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.