சென்னை: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநராக அவரது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதேபோல சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தைச் சேர்ந்தசி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்குமிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் உறுதியான தொண்டரான அவர், தனது சித்தாந்தத்தை அணிகலனாகக் கொண்டு தனது அனைத்துப் பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:புதிய பொறுப்பில் எனது நண்பர்சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாக செயல்படவும், அதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கவும் வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:மக்கள் நலன், மாநிலநலன், தேசிய நலன் மிக்க சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கிறது. மேலும், மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசனை நாகாலாந்து ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் அவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு நல்வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருவரது பணி சிறக்க வாழ்த்துகள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:சி.பி.ராதாகிருஷ்ணனின் பணி சிறக்க எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி:அன்பாலும், செயலாலும் ஜார்க்கண்ட் மாநில மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்துகிறேன்.
வி.கே.சசிகலா:அன்பு சகோதரர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மக்கள் பணி எந்நாளும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Leave a Reply