90 மணி நேரம் .. 10 பொது கூட்டங்கள்.. 10,800 கி.மீ. தூரம்.. பிரதமர் மோடியின் பரப்புரை பயணம்..!

புதுடெல்லி: 90 மணி நேரங்களில் 10 தேர்தல் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுமார் 10,800 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கவுள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிபுரா மாநிலத்துக்கு வரும் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் மும்பை பெருமாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இதற்காக அவர் 90 மணி நேரங்களில் 10,800 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ளார். கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 6,450 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.

இந்தப் பொதுக் கூட்டங்கள் அகர்தலா, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதி தனது பயணத்தை டெல்லியிலிருந்து தொடங்கிய பிரதமர் மோடி, முதலில் லக்னோவுக்கு சென்றார். அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அவர் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து மும்பைக்குப் பறந்த பிரதமர் அங்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து டெல்லிக்கு வந்த அவர் அல்ஜாமியா-துஸ்-சாய்பியா அரபி அகாடமியில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகங்களை தொடங்கிவைத்தார்.

இதன்மூலம் அவர் 2,700 கிலோமீட்டர் தூரத்துக்கு பயணித்தார். இதைத் தொடர்ந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்ற பிரதமர் மோடி அங்கு அம்பாசா, ராதாகிஷோர்பூர் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் டெல்லி திரும்பினார். இதன்மூலம் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அவர் பயணித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று டெல்லியிலுள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் நடைபெற்ற மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தானிலுள்ள தவுசாவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றார். இதன்மூலம் 1,750 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணித்துள்ளார் பிரதமர்.

இந்நிலையில் பெங்களூரில் இன்று சர்வதேச விமானக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் மீண்டும் திரிபுராவுக்கு வந்து அகர்தலாவில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் டெல்லி திரும்புவார். இதன்மூலம் சுமார் 3,350 கிலோமீட்டர் தூரத்தை அவர் கடந்திருப்பார். இதைத் தொடர்ந்து சுமார் 90 மணி நேரங்களில் 10,800 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணித்து பல்வேறு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றும், பல்வேறு அரசு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமையை பெற்றிருப்பார் பிரதமர் மோடி.