24 மணி நேரத்தில் அடுத்தடுத்து திமுகவிலிருந்து 111 பேர் கூண்டோடு நீக்கம்- நடந்தது என்ன..?

சென்னை: திமுக கட்சியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 111 வேட்பாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் செய்தாலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மிசா காலத்தையே பார்த்தவன் நான்.. என்னிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்துள்ளார். ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையை முடக்குவார் என்று எடப்பாடி கூறியதற்கு ஸ்டாலின் இப்படி பதில் அளித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் திமுக தனது கட்சிக்கு உள்ளேயே களையெடுப்பு பணிகளை தொடங்கி உள்ளது. திமுக சட்டசபை தேர்தல் கூட்டணியை போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இதனால் பல இடங்களில் இடப்பங்கீட்டில் கடும் மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் திமுக நிர்வாகிகளுக்கு அவர்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. அதேபோல் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் இடையே சலசலப்பு காணப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்று எப்படியாவது நகரமன்ற தலைவர், மேயர் பதவிகளை வாங்கிவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த திமுக நிர்வாகிகள் பலர் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் திமுகவை எதிர்த்து சில திமுக நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட தொடங்கி உள்ளனர்.

தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து இவர்கள் போட்டியிட்டுள்ளனர். அதேபோல் திமுகவிற்கு எதிராகவும் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட 55 திமுக உறுப்பினர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 56 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று 55 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளனர். வேலூர், தஞ்சை, நாகை, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர். நேற்று திருவொற்றியூர் ஆதி குருசாமி உள்பட 56 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

நேற்று தஞ்சை, சேலம், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். கட்சியின் உத்தரவை மதிக்கவில்லை. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரத்தில் 111 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது தற்காலிக நீக்கம் என்பதால் தேர்தலுக்கு பின் மீண்டும் இவர்கள் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளன.