தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னையில் ஆலோசனை..!

சென்னை: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இரண்டாவது நாளாக இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.

தேசியளவில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஒரு பக்கமும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மறுபுறமும் களமிறங்குகிறது. தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இப்போது சென்னை வந்துள்ளார். லோக்சபா தேர்தலைச் சுமுகமாக நடத்துவது குறித்து அவர் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில், இப்போது இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்தினர். அவர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பிற்பகலில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனையை வழங்கினர்.

இந்தச் சூழலில் தான் இரண்டாம் நாளாக இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், அம்மாநில காவல்துறை அதிகாரிகளுடன் பங்கேற்று உள்ளனர். அவர்கள் தங்கள் மாநிலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை தர உள்ளனர்.

தொடர்ந்து இன்று மதியம் வருமான வரித்துறை துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது அதன் பிறகு கடைசியாகத் தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடக்கிறது இதில் லோக்சபா தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்தே ஆலோசிக்கப்படுகிறது.