நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட சென்னை ரிப்பன் கட்டடம்-முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணிப்பு.!!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக அர்ப்பணித்தார். இப்பணி நிறைவேற்றப்பட்டதன் மூலம், குடியரசு தினம், சுதந்திர தினங்களில் ரிப்பன் கட்டட முகப்பானது மூவர்ண விளக்குகளாலும், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று இளஞ்சிவப்பு நிறத்திலும், உலக தண்டுவட மரப்பு நோய் விழிப்புணர்வு தினத்தன்று ஆரஞ்சு நிறத்திலும், உலக மனநலிவு நோய் விழிப்புணர்வு தினத்தன்று நீல நிறத்திலும் ஒளிரூட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு முதல்வர், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஓர் ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.