கோவையில் மீண்டும் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு- பாஜக இப்ராஹிம் எச்சரிக்கை..!

கோவை : ”கோவையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன,” என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பா.ஜ., விளங்குகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை வி.சி., கட்சியினர் உட்பட பல கட்சியினர் முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர்.

பா.ஜ., சிறுபான்மை பிரிவின் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், ஹிந்துக்களோடு இணைந்து ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுப்போம்.

மக்களின் உரிமைகளுக்காக போராடினால் தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கின்றனர். ஊழல்வாதிகள் தான் தற்போது தி.மு.க., அமைச்சரவையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

கோவையில் சில இடங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன; அவற்றை நாங்கள் மாற்றுவோம். கோவையில் அடுத்த ஆறு மாதத்துக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

அதற்காக இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றனர். கோவை உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவை போலீசார் மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.