மத்திய அரசின் மலிவு விலையில் ‘பாரத் அரிசி” … இன்று முதல் விற்பனை..!!

டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் மானிய விலையில் ‘பாரத் அரிசியை’ விற்பனை செய்ய உள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் இந்த வேகத்தில் வளரவில்லை. குறைவான ஊதியம், நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலை வாய்ப்பு, நிரந்தரமில்லாத வேலைகள் போன்றவை காரணமாக சாமானிய மக்களால் இந்த விலைவாசி உயர்வுக்கு ஈடுகட்ட முடியவில்லை. எனவே இம்மக்களுக்காக மத்திய அரசு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் , கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்திய அளவில் அரிசியின் சராசரி விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் ‘பாரத் அரிசி’யை மத்திய அரசு விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது. 1 கிலோ ரூ.29க்கு என, 5 மற்றும் 10 கிலோ மூட்டையில் அரிசி விற்கப்படும். இந்த விற்பனை இன்று முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அரிசியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சமீபத்தில் பாசுமதி அல்லாத அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது மானிய விலையில் பாரத் அரிசி விற்பனையை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

அதேபோல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பதப்படுத்துபவர்கள் / மில்லர்கள், வர்த்தகர்கள் ,மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், தங்கள் அரிசி கையிருப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.