இல்லத்தரசிகளுக்கு செம கொண்டாட்டம்…சதமடித்த தக்காளி விலை மீண்டும் சரிந்தது..!!

கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயை கடந்து உச்சத்தில் இருந்தது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று (2-ம் தேதி) கோயம்பேடு சந்தையில், தக்காளி கிலோவுக்கு 20 ரூபாய் வரை குறைந்து முதல் தர தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக, கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து ஆயிரம் டன்னுக்கும் அதிகமான அளவில் வரும்போது தக்காளியின் விலை குறைவாக இருக்கும்.

ஆனால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகரித்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், இந்த பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு போதிய அளவு தக்காளி வரவில்லை.

கடந்த வாரங்களில் 500 டன்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தது. தற்போது 800 முதல் 900 டன்கள் அளவிற்கு வருவதன் காரணமாக தக்காளியின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரும் நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரிக்கும் சூழலில், தக்காளியின் விலை மேலும் குறையும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 30 முதல் 40 ரூபாய் வரை குறைந்திருப்பது இல்லத்தரசிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.