ஆசனவாயில் செல்போன் பதுக்கல்… கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் – சேலம் மத்திய சிறையில் அதிரடி சோதனை.!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வசதி படைத்த கைதிகள், மிக ரகசியமாக செல்போன்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதன்பேரில், அவ்வப்போது சிறை சோதனைக்குழு காவலர்கள், அதிரடி சோதனையை நடத்தி செல்போன், சார்ஜர்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதில், கடந்த 3 நாட்களுக்கு முன் குமரகுரு என்ற கைதி, தனது உடலில் ஆசனவாயில் பகுதியில் செல்போனை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்து விசாரித்ததில், வசதி படைத்த கைதிகளுக்கு உதவும் வகையில், செல்போனை ஆசனவாயில் பகுதியில் பதுக்கி வைத்து, தேவைப்படும்போது அவர்களுக்கு எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், நாமக்கல்லை சேர்ந்த கைதி பிரவீன் (22) என்பவர், ஆசனவாயில் பகுதியில் பதுக்கி வைத்திருந்த மற்றொரு செல்போனை சிறை காவலர்கள் மீட்டனர்.

விசாரணையில் அவரிடம் ராஜ்குமார் என்ற மற்றொரு கைதி, செல்போனை கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. சிக்கன் உள்ளிட்ட நல்ல சாப்பாட்டிற்காக இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிந்தது. நடப்பு மாதத்தில் (மே) மட்டும், சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதும், அதனை பதுக்கி வைத்திருந்த கைதிகள் மீது, அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமும் கைதிகள் பிரவீன், ராஜ்குமார் மீது ஜெயிலர் மதிவாணன் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் மீது இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கினால், உடனடியாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதனை பதுக்கிய கைதிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம், சிறைக்குள் இந்த செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது வார்டன்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலம் சிறை காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.