வனப்பகுதிக்குள் கால்நடைகளைமேய்ச்சலுக்கு அனுமதிக்கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்ககூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், மனித -விலங்கு மோதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனிடையில் வனக்குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் சிபிஐ எஸ்.பி நிர்மலா தேவி, டி.எஸ்.பி சந்தோஷ்குமார் டி.எஸ்.பி ஆகாஷ்குமார் உட்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்பே தமிழக அரசு தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் போன்றோரரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கேரள அரசு இன்னும் அதிகாரியை பரிந்துரைக்காததால் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் குறித்து இறுதி முடிவெடுக்க ஏதுவாக வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.