திருச்சியில் தேர்தல் சோதனையில் 4 இடத்தில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்.!!

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.