கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த துணி வியாபாரியான ஜமேஷா முபின் (29) உடல் கருகி இறந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பது தெரியவந்தது. ஜமேஷா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆன்லைனில் ஆர்டர் தந்து வெடிபொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அதை காரில் கொண்டு சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்த போது கோயில் அருகே வெடித்து விட்டதாக தெரிகிறது. வெடி பொருட்கள் வாங்கியது, சதி திட்டத்திற்கு உதவியது என பல்வேறு காரணங்களுக்காக ஜமேஷா முபினின் கூட்டாளிகளான உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது அசாருதீன் (25), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (24) ஆகிய 6 பேரை சட்ட விரோத செயல்பாடுகளுக்காக உபா சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இவர்களுடன் தொடர்புடைய குன்னூரை சேர்ந்த உமர் பாருக் (38), உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான் (27), முகமது தவுபிக் (29), சேக் இதயதுல்லா (38), உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த சனாபர் அலி (30) ஆ ஆகியோரை கைது செய்தனர். கைதான 11 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழ்நாடு, கேரளா கர்நாடகா உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு, குனியமுத்தூர், பிருந்தாவன் நகர் உட்பட 15 இடங்களில் சோதனை என்.ஐ.ஏ
சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply