கிரேட் எஸ்கேப்… பெரும் விபத்தில் இருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்… ஓமலூரில் பரபரப்பு..!

சேலம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்றபோது, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் காரில் ஓமலூர் பேருந்து நிலையத்தைக் கடந்த சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் இருந்த டிராஃபிக் சிக்னல் அடியோடு பிடுங்கிக்கொண்டு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 15) காலையில் சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஓமலூரைக் கடந்து சென்ற சிறிது நேரத்தில் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டிராஃபிக் சிக்னல் சாய்ந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். சமீபத்தில் வேலூர் சென்று வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் திட்டங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த ஸ்டாலின், சேலம் மாநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபொது திடீரென ஓமலூர் – மேட்டூர் பிரதான சாலையில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வில் இறங்கினார். திடீரென ஓமலூர் தாலுகா ஆபீஸுக்கு வண்டியை விடச் சொல்லி, அங்கு சென்று வருகைப் பதிவேட்டினை முதல்வர் பார்வையிட்டார். அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதையடுத்து வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதல்வர், எப்போது மனு வழங்கப்பட்டது? உடனடியாக தீர்வு காணப்பட்டதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகருக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் – மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சிறிது நேரத்தில், அவர் வந்த வழியில் இருந்த சிக்னல் கம்பம் சாய்ந்தது. ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு தர்மபுரி, சேலம், மேட்டூர் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருந்து வாகனங்கள் வருவது வழக்கம். அந்த வாகனங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை சார்பில் அப்பகுதியில் சுமார் 30 அடி உயரம் கொண்ட ராட்சத சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கம்பங்கள் அமைத்து பல நாட்கள் ஆனதால் அந்த கம்பங்களின் அடிப்பகுதியில் துருப்பிடித்து எந்த நிறத்திலும் கீழே விழும் நிலையில் காணப்பட்டது.

இது தொடர்பாக அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கார் நிறுத்த ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல் துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுய் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென அந்த சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் எதுவும் இல்லாததால் உயிர்ச் சேதம் மற்றும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சிக்னல் சரிவதற்குச் சற்று முன்னர் தான் அந்த சாலை வழியாகப் பயணித்துச் சென்றுள்ளார். நல்ல வேளையாக முதல்வர் ஸ்டாலின் ஓமலூர் கடந்து செல்லும் நேரத்தில் சிக்னல் கம்பம் சாயாமல் இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிறைந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரின் மையப் பகுதியில் சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சி என்றால், யாருக்கும் எந்த சேதமும் ஆகாமல் தவிர்க்கப்பட்டது அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்துள்ளது.