நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை தொடர்புடைய அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய நகராட்சி ஆணையரிடமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய பேரூராட்சியின் செயல் அலுவலரிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்து நகர்ப்புற அமைப்புகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 49 (2ஏ) மற்றும் தொடர்புடைய மாநகராட்சிகளின் சட்டப் பிரிவு மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்), விதிகள், 2006, பிரிவு 116 (13)ன் படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வரும் காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆக்கப்படுவார்கள்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply