தமிழக அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் 74 அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இந்த திட்டத்தில் 1,39,138 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் கோவை மாநகராட்சியில் 62 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 7618 மாணவ, மாணவிகளும், மதுக்கரையில் 230 மாணவ, மாணவிகளும், மேட்டுப்பாளையத்தில் 1119 மாணவ, மாணவிகளும் பயன்பெற உள்ளனர்.
மாவட்ட அளவில் முதல் கட்டமாக 8967 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவர். காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடலாம். காலை உணவு சாப்பிட்ட பின்னர், பள்ளி வகுப்பறைக்கு சென்று படிக்கலாம். கோவை மாவட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திங்கள்கிழமை உப்புமா, ரவா, சேமியா, அரிசி, கோதுமை ரவா போன்றவற்றில் செய்த உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வழங்கப்படும். ரவா, சேமியா, சோளம், கோதுமை ரவா போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் காய்கறி சேர்த்து கிச்சடி செய்யப்படும். புதன்கிழமை ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை எதாவது ஒரு கிச்சடி, ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும்.வாரம் இரு நாள் உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியத்தில் செய்த காலை உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் படிப்படியாக அரசு பள்ளிகளில் காலை சத்துணவு திட்டம் அமலாக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக, வெளியான பள்ளிகளில் பயன் பெறும் மாணவ, மாணவிகளிடம் இந்த உணவு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஸ்ரீதர் கூறும்போது,
தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த இந்த திட்டத்தின் படி கோவையில் காலை உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் ஏற்கனவே மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளில் சிலர் இந்த காலை உணவு திட்டத்திலும் பயன்பெறுவர். மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு, முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் எவ்வளவு பேர் உணவு சாப்பிடு கிறார்கள், உணவின் தரம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கோவையில் ஐந்து மண்டலங்கள் இருப்பதால், மண்டலத்துக்கு ஒன்று வீதம் 5 இடங்களில் சமையலறைகள் கட்டப்படுகின்றன. அங்கிருந்த, அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, உணவு சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 9 பள்ளிகளில் படிக்கும், 1,119 மாணவ மாணவிகளுக்கு, மதுக்கரை நகராட்சியில் 3 பள்ளிகளை சேர்ந்த, 739 மாணவர்களும் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் காலை உணவு தயாரிக்க, சமையலறை கட்டும் பணி தொடங்கி உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply