பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்க மருத்துவக் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவியருடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். மாநிலம் முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வாகனங்கள் பிரித்து வழங்கப்பட்டு பள்ளி சென்று மணவர்களுக்கு மனநல மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும்போது மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் திரையிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்ப்ட்டுள்ளது.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், மாணவர்களின் தற்கொலைகள் உளச்சோர்வைத் தருவதாக முதலமைச்சர் என்னிடம் கூறினார். அறிவு – உடல் – மனம் ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். குழந்தைகள் பயப்படக் கூடாது. மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல. அதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தால் மாணவர்களுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியும், பிற 3,000 மாணவர்களும் எனது குழந்தைகள் தான். பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது எங்கள் கடமை. சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்றார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு பேசுகையில், மாணவர்களே தமிழ்நாட்டின் எதிர்காலம். மாணவர்களுக்கான பணியில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் முதலமைச்சர். மாணவர்கள் உடல்நலத்தையும், மனநலத்தையும் ஒருங்கே பேணும் விதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மனநலம், உடல்நலம் ஆகிய இரண்டும் ஒன்றோடு இன்று இணைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் சன்னல்களைக் கூட திறப்பதில்லை. தனித்தனி தீவுகளாக மனிதர்கள் தேங்கிவிட்டனர். இதனால் உலகம் முழுவதும் மாணவர்களின் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும். தடைகள் வரும்போதெல்லாம் அதைத் தகர்த்து வெற்றி கொண்டு உயரப் பறக்க கல்வியும், தன்னம்பிக்கையும் முக்கியம் என்றார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், என்னால் நீண்ட நேரம் உரையாற்ற முடியாத சூழல். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின் சென்னையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு வருகிறேன். தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும், தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் இங்கு வந்துள்ளேன். மருந்து, மாத்திரைகளை விட வலிமையானவை மகிழ்ச்சி. எனக்கு உடற்சோர்வு சற்று இருந்தாலும், மாணவர்களைப் பார்த்த உடன் அது பறந்துபோய்விட்டது.
நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா? என்று கேட்டேன் அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன். யாரும் காலையில் சாப்பிடாமல் வரவே கூடாது. காலையில் தான் அதிகமாக சாப்பிட வேண்டும், மதியம் அதை விட குறைவாகவும், இரவு அதை விட குறைவாகவும் சாப்பிட வேண்டும். காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் சாப்பிடும் பழக்கம் இன்று பலரிடம் இருக்கிறது. அப்படி இருக்கக் கூடாது.
காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் நேற்று தான் கையெழுத்திட்டுள்ளேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும். அதற்காகவே இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ள வேண்டும். அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்ட பள்ளி. அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகிய அனைத்தையும் பலப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்கள், மதிப்புயர் கூடங்களாக மாற வேண்டும். எல்லாவற்றையும் அடைவதற்கு திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்றார்.
Leave a Reply