பிரம்மோஸ், சுகோய் எஸ்யு – 30 கூட்டணி விமான படையை வலிமையாக்கும் – தளபதி வி.ஆர்.சவுத்ரி பேட்டி..!

புதுடெல்லி: பிரம்மோஸ், சுகோய் எஸ்யு-30 கூட்டணி விமானப் படையை வலிமையாக்கும் என்று விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தி நிறுவனத்துக்கு விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: நமது விமானப் படையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகள், சுகோய் எஸ்யு-30 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வகை ஏவுகணைகள், விமானங்கள் உண்மையில் நமக்கு அளப்பரிய திறனைக் கொடுத்துள்ளன. அவை நமது செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. தற்போது சுகோய் எஸ்யு-30 ரக விமானத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பிரம்மோஸ், சுகோய் எஸ்யு-30 கூட்டணி நமது விமானப் படையை வலிமையாக்கி உள்ளது.

சிறிய வகையிலான அடுத்ததலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை வேறு சில போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வருகின்றன.

துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வரும் ஆண்டுகளில் நமது செயல்திறனை மேம்படுத்தும்.

சுகோய் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணை நமது விமானப் படையின் வலிமையை வெகுவாக உயர்த்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் வடக்கு எல்லைகளில் நிலைமை மோசமாக இருந்தது. எனவே, அதுபோன்ற நிலப்பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்த வகை ஆயுதங்களை நாம் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

புதிய வகை பிரம்மோஸ் ஏவுகணைகளை மிக்-29, மிராஜ் 2000, எல்சிஏ (இலகு ரக போர் விமானங்கள்) விமானங்களில் எதிர்காலத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு வி.ஆர். சவுத்ரி கூறினார்.