சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்-போக்ஸோவில் வாலிபர் கைது..!

கோவை: பொள்ளாச்சி வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது
உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரி புதூர் பகுதியில் உள்ளது. இதனால் அந்த
சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவின்குமார் (19) என்பவருடன்
அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். அது
நாளடையில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து
வந்தனர். அப்போது நவின்குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி
செஞ்சேரிபுதூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து திருமணம்
செய்து கொண்டனர்.
பின்னர் நவின்குமார் சிறுமியை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.
அங்கு தனது பெற்றோரிடம் சிறுமி மேஜர் என கூறியுள்ளார். பின்னர்
சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று அங்கு குடும்பம் நடத்தினார்.
அப்போது பல முறை சிறுமியை நவின்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த
நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு
ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர். சிறுமி தனது தாய் வீட்டுக்கு
வந்தார். இதனால் சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளிக்க சிறுமியிடம் கூறினார்.
இதையடுத்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார்
அளித்தார். போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்து நவின்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.