குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- சி வோட்டர் கருத்து கணிப்பு..!

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஏபிபி நியூஸ்- சிவோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரையில் பாஜக- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையேதான் போட்டி இருந்து வந்தது. இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கு தாவிவிட்ட நிலையில் ஆம் ஆத்மியின் வருகையும் காங்கிரஸுக்கு பெரும் சவாலானதாக இருந்து வருகிறது.

குஜராத்தில் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 99; காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. தற்போது குஜராத் சட்டசபையில் பாஜகவின் பலம் 111; காங்கிரஸ் கட்சிக்கு 63 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் 92.

தற்போதைய நிலையில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்கிறது ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்து கணிப்பு. பாஜகவுக்கு 135 முதல் 143 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது இக்கருத்து கணிப்பு. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்கிறது இந்த சர்வே முடிவுகள்.

2017 தேர்தலில் பாஜக 49.1% வாக்குகளைப் பெற்ற நிலையில் இம்முறை 45.8% ஆக குறையுமாம்; அதேபோல காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 41.4%-ல் இருந்து 32.3% ஆக குறையுமாம். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தமது முதல் தேர்தலிலேயே 17.4% வாக்குகளைப் பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு

இமாச்சல பிரதேசத்தில் மொத்த இடங்கள் 68. இம்மாநிலத்திலும் பாஜக- காங்கிரஸ் என இரு கட்சிகளிடையேதான் மோதல் இருந்து வந்தது. இப்போது ஆம் ஆத்மி கட்சி, மும்முனைப் போட்டியை உருவாக்கி உள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 45; காங்கிரஸ் 29; ஆம் ஆத்மி 1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது சி வோட்டர் கருத்து கணிப்பு. கடந்த முறை 48.8% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 45.2%; காங்கிரஸ் கட்சி 41.7%-ல் இருந்து 33.9%; ஆம் ஆத்மி கட்சி 9.5% வாக்குகளைப் பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

சட்டசபை தேர்தல் நடைபெறும் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ் வெற்றி தடுக்கப்பட்டு பாஜக வெல்வது சாத்தியமாகும் என்பதையே இக்கருத்து கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.