மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிசுக்கு பதில் முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக விட்டு கொடுத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்றார். இவருடன் முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தற்போது 40 சிவசேனா அதிருப்தியாளர்கள் உள்ளனர். ஆனால் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்படி இருக்கும்போது பாஜக ஏன் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்துள்ளது என்பதற்கு பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
மகாராஷ்டிராவில் 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்கு பிறகு முதல்வர் நாற்காலியை இரண்டரை ஆண்டுகள் பங்கீட்டு கொள்ள சிவசேனா விரும்பியது. இதனை பாஜக விரும்பவில்லை. இதையடுத்து கூட்டணி முறிந்தது. இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடன்படவில்லை. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை அடுத்த சில நாட்களில் ராஜினாமா செய்தார். இந்த அவசர நடவடிக்கை பாஜக அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தது. இதனால் தான் தற்போது பாஜக அவசரம் காட்டாமல் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு வழங்கி உள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு உத்தவ் தாக்கரே மக்களிடம் பேசினார். அப்போது “பால்தாக்கரேவின் மகனை நீங்கள் (பாஜக) வீழ்த்திவிட்டார்கள்” என்றார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே மக்களிடம் அனுதாப அலையை பெறும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் தற்போது முதல்வர் பொறுப்பை பாஜக ஏற்றால் உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும். மேலும் அது உத்தவ் தாக்கரேவுக்கு கூடுதல் பலத்தை அளிக்கலாம். இதை தவிர்க்கவே சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் பாஜக மீதான உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டு பெரிதாக எடுத்து கொள்ளப்படாது என அக்கட்சி கணக்கீட்டு கொண்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேவின் கொள்கையையும், அவரது கோட்பாடுகளையும் பாஜக பின்பற்றுகிறது என்பதை நிரூபிக்க பாஜக நினைக்கிறது. இதன் ஒருபகுதியாக தான் ஏக்நாத் ஷிண்டேவை மகாராஷ்டிரா மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தான் தேவேந்திர பட்னாவிஸ் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார். தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ”முதல்வர் நாற்காலியில் ‘சிவசேனா தொண்டர் இருப்பார். அவருடன் இணைந்து பால்தக்கரேவின் கனவு நிறைவேற்றுவோம்” என கூறியிருந்தார்.
மகாராஷ்டிராவில் தற்போது உண்மையான சிவசேனா யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து மோதல் உள்ளது. உண்மையான சிவசேனா நாங்கள் தான் என ஏக்நாத் ஷிண்டே கூறிவரும் நிலையில் அவருக்கு முதல்வர் பதவி என்பது கூடுதல் பலத்தை வழங்கும். இதன்மூலம் 2024 மக்களவை தேர்தலில் பாஜக உண்மையான சிவசேனா உடன் இருப்பதாக கூறி வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என பாஜக நம்புகிறது.
தற்போதைய சூழலில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வரும் நாட்களில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேயின் பக்கம் சாயலாம். இதனால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும். இத்தகைய சூழல் வந்தாலும் முதல்வர் பதவியில் பாஜக இல்லாததால் தற்போதைய நிலைப்பாட்டால் அது கட்சிக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது என அவர்கள் கணக்கு போட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Leave a Reply