அதிமுக உள் விவகாரத்தில் பாஜக தலையிடலாம்… எல்லா உரிமையும் உண்டு.. தப்பே இல்ல… வைத்திலிங்கம் சொன்ன கருத்து..!!

சென்னை : அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதில் எந்த தவறும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக மோதலுக்கு இடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் டெல்லி பாஜக தலைவர்களை சந்திக்க முயன்று வருவது விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்ற அடிப்படையில் எங்களது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர்கள் தான் கட்சியை இணைத்து வைத்தார்கள். இரு அணிகளும் இணைவதில் பாஜக தலைமை உதவி இருக்கிறது என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினரும் இரு அணிகளாகப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி முட்டி மோதி, தற்போது பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே, தங்கள் அணிக்கு டெல்லியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேச ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் டெல்லிக்கே சென்றும் முயன்றனர். டெல்லியில் இருவரையும் தனியாகச் சந்திக்க பிரதமர் மோடி மறுத்த நிலையில், சென்னையில் சில நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அண்மையில் அமித்ஷாவை சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக மோதல் தொடங்கியது முதலே, இரு பிரிவினரும் பாஜக தலைமையை சந்திக்க முயன்று வருவது அரசியல் அரங்கில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. உட்கட்சிப் பிரச்சனைக்கு பாஜகவின் உதவியை நாட வேண்டிய அவசியம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எனினும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்கள் முயற்சிகளைக் கைவிடுவதாக இல்லை. அவர்களின் சார்பில் டெல்லியில் தொடர்ந்து மூவ்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாஜக தயவை நாடுவது ஏன் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் பதில் அளித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் எனச் சொல்லும் நீங்கள் எதற்கெடுத்தாலும் டெல்லி பாஜகவை நோக்கி ஓடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வைத்திலிங்கம், தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அந்த அடிப்படையில் எங்களது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. கூட்டணியில் உள்ளோம் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பார். அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதில் தவறில்லை. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர்கள் தான் கட்சியை இணைத்து வைத்தார்கள். இதனை ஓபிஎஸ்ஸே சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இரு அணிகளும் இணைவதில் பாஜக தலைமை உதவி இருக்கிறது. அதனால், இதில் எந்த தவறும் இல்லை.

கட்சி ஒன்றிணைய வேண்டும் என 90% தொண்டர்கள் மத்தியில் எண்ணம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியில் அணியில் உள்ள தலைவர்களின் மத்தியிலும் இந்த எண்ணம் வந்துவிட்டது. பாஜக அதிமுகவை இணைத்து வைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.” என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.