அரசு பஸ் மீது பைக் மோதி விபத்து : ஒருவர் பலி – இருவர் படுகாயம்..!

தொண்டாமுத்தூர் அருகே அரசு பஸ் – பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயம் அடைந்தார்.
வடவள்ளி, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 23); பெயிண்டராக வேலை பார்க்கிறார். இவரது நண்பர்கள் அபுதாஹிர் வசந்தகுமார் ஆகிய 3 பேர், நேற்றிரவு தொண்டாமுத்தூர் மெயின் ரோடு – புதுப்பாளையம் வாய்க்கால் பிரிவருகே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காந்திபுரம் டூ குப்பேபாளையம் வழித்தடத்தில் இயங்கும் 64 நம்பர் கொண்ட அரசு பஸ், அதே ரோட்டில் கிழக்கிலிருந்து மேற்காக நோக்கி வேகமாக வந்துள்ளது. அப்போது, அந்த அரசு பஸ் மீது பைக் பலமாக மோதியது. இதில், பைக்கை ஓட்டி வந்த ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் பைக்கில் சென்ற அபுதாகீர் என்பவருக்கு, வலது காலில் எலும்பு முறிவும், வசந்தகுமாருக்கு முதுகில் பலத்த காயமும் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, தங்க சடையாண்டி (வயது 28) என்பவர் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.