அடுத்து மிகப்பெரிய கொரோனா அலைக்கு தயாராக இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை.!

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டுமென்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அடுத்து ஏற்படும் கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அடுத்து வரும் ஒவ்வொரு கொரோனா அலையும் வேகமாகப் பரவக் கூடியதும், தடுப்பூசியின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே, அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைப் பொறுத்து அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக வங்கியின் மூத்த ஆலோசகர் பிலிப் ஷெல்கென்ஸ், “கொரோனா உயிரிழப்புகள் மறுபடியும் அதிகரித்துள்ளது. பின்தங்கிய நாடுகள் மட்டுமில்லாமல் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது”. என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “பிஏ.4 மற்றும் பிஏ.5 வகை கொரோனா, உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்க கூடும் அபாயம் உள்ளது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.