புதிய ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் அதன் திரையைப் பாதுகாக்க நாம் அனைவரும் டெம்பள்ட் கிளாஸ் எனப்படும் ஸ்கிரீன் கார்டை ஒட்டிக்கொள்கிறோம். ஆனால், சந்தையில் விற்கப்படும் பல ஸ்கிரீன் கார்டுகள் தரமற்றதாக இருப்பதால் போனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தற்போது ஸ்கிரீன் கார்டுகளின் தரத்தை உறுதி செய்வதற்கான புதிய விதிகளையும் கடுமையான வழிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களை ‘இந்திய தர நிர்ணய அமைப்பு’ கட்டாயப் பதிவு வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், தரமற்ற மற்றும் மலிவான ஸ்கிரீன் கார்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய விதிகள் முழுமையாக அமலுக்கு வரவுள்ளன. அதற்குள் அனைத்து உற்பத்தியாளர்களும் மற்றும் இறக்குமதியாளர்களும் பி.ஐ.எஸ் தரச்சான்று நெறிமுறைகளைப் பின்பற்றுவதுடன், தரம், உறுதித்தன்மை, ஒளி ஊடுருவும் திறன் மற்றும் கண்ணைப் பாதுகாக்கும் ஃபில்டர்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்கிரீன் கார்டுகளின் பேக்கிங் பாக்ஸ் மீது உற்பத்தியாளரின் பெயர், பேட்ச் எண் மற்றும் தடிமன் போன்ற முக்கிய விவரங்களை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், இனி பொதுமக்கள் சந்தையில் மிகச் சிறந்த மற்றும் உயர்தரமான ஸ்கிரீன் கார்டுகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.







