டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இரு சக்கர வாகனத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த ஜூலை மாதத்திற்குள் தெளிவான திட்டத்தை வகுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதுவரை டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அனிருத்த போஸ், ராஜேஸ் பிந்தல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை டெல்லி அரசு உருவாக்கவில்லை என உபேர் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் வாதிட்டார்.

அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீஷ் வஷிஷ் வாதிட்டார்.இதனையடுத்து டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்கலாம் என்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..