நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகிறது : நவ.19ல் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது. இதன் காரணமாக நவ. 19ம் தேதி முதல் தமிழகம் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கன மழை துவங்கி நேற்று முன்தினம் வரை பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.அதிகபட்சமாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் நவ. 18ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் நவ.18ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பிற்பகல் வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.தெற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நேற்று வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; அவ்வப்போது வானம் மேக மூட்டமாக காணப்படும்.நாளை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளிலும் நாளை மறுநாள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை சூறாவளி வீசும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நவ. 19ம் தேதியன்று தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது.இதனால் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை கடலோரம் மற்றும் அதன் உள்பகுதிகளில் நவ. 19ம் தேதி கன மழை பெய்யலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.