மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் உக்ரைன் நாட்டு உளவுத் துறை தலைவர் ஒருவர் பகீர் தகவலை அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் புரிய தொடங்கியது. ஓராண்டை கடந்தும் ஓயவில்லை. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு அன்றும் உக்ரைன் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ரஷ்யா நடத்தியது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கொடுத்தும் ஆயுதங்களை கொடுத்தும் வருவதால் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து வலுவாக சண்டை செய்கிறது. இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது இடங்களில் தோன்றிய போதும் அவரது முகம் வாட்டமாகவே இருந்தது. ரஷ்யாவில் வெற்றி விழா அணிவகுப்பின் போது முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் கம்பீரமில்லாமலேயே புடின் அமர்ந்திருந்தார். கைகளை கட்டிக் கொண்டு கால்களில் கம்பளி போர்த்திக் கொண்டிருந்தார். இதனால் அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி வெளியேறிய ஒரு அதிகாரிக்கு ரஷ்ய உளவாளியிடம் இருந்து கிடைத்த தகவலின்படி புடின் தலைவலியால் அவதிப்படுகிறார். அவர் டிவியில் தோன்றும் போது அவர் பேச வேண்டியதை ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் எழுதி கொடுக்க கூறுகிறார். இதற்கு காரணம் அவரது பார்வை மங்க வருகிறது.
எனினும் அவர் கண்ணாடி அணியவில்லை. ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரது கால்கள் அவ்வப்போது ஆடின. அது கேமராவில் கூட பதிவாகியிருந்தது. புடின் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்த உளவாளி அனுப்பிய செய்தியில் கூறப்பட்டிருந்தது.
70 வயதாகும் புடின் உடல்நிலை குறித்து இப்படி நாள்தோறும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் புடின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரிலோ புடானோவ் கூறுகையில் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. இந்த தகவல் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு வந்துள்ளது.
அவர் நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். புடினுக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என்பதை என்னால் கூற முடியாது என தெரிவித்தார். கடந்த மாதம் விளாதிமிர் புடின் மாஸ்கோவில் உள்ள அவருடைய அதிபர் மாளிகையில் 5 படிகளில் இருந்து தவறி விழுந்தார் என தகவல்கள் வெளியாகின. அப்போது அங்கிருந்த அவரது பாதுகாவலர்கள் அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவருக்கு அவ்வப்பது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வார்த்தைகள் குழறுகின்றன என தகவல்கள் கிடைத்துள்ளன.
ரஷ்ய அதிபர் புடினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போதிலும் அவரது உடல்நிலை மோசமாகி கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் மாஸ்கோவில் பிடல் கேஸ்ட்ரோவின் சிலைத்திறப்பு விழாவில் கூட புடின் நாற்காலியை கெட்டியாக பிடித்தபடியே அமர்ந்திருந்தார். அது போல் அவருக்கு தைராய்டு கேன்சர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரும புத்துணர்ச்சிக்காக அவர் மானின் ரத்தத்தில் குளிக்கும் சிகிச்சையை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போல் 2000 ஆவது ஆண்டுகளில் புடின் சிவப்பு நிற மானின் கொம்பை ஒடித்து அதிலிருந்து வரும் ஒரு திரவத்தில் பல முறை குளித்ததாகவும் சொல்லப்படுகிறது.