கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்: தமிழக கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு..!

நாமக்கல்: கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்கத்தில் உள்ள கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரளா மாநிலம் கோட்டையும் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்புக்கரை மற்றும் தலயாழம் பகுதியில் பண்ணையில் உள்ள வாத்துக்கள் திடீரென செத்து மடிந்தது. இதனை அடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறையினர் அதன் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக இறந்ததாக ஆய்வு முடிவில் தெரியவந்தது. இதன் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன, இங்கு தினசரி 5 முதல் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலை எடுத்து நாமக்கல் கோழி பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழி பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணைகளுக்கு உள்ளே வரும் வாகனங்களும், பண்ணையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களும் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

நாமக்கல் பண்ணைகளில் இருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான முட்டைகள், மற்றும் அதிக அளவிலான இறைச்சி கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வழக்கம். ஆனால் தற்போது அங்கு பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.