கோவையில் ஆன்லைன் மூலம் வெடிபொருள் விற்பனை செய்ய முயற்சி – 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை.!!

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிலரிடம் வெடி பொருட்கள் இருப்பதாகவும், அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் கரும்புக்கடை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் தொண்டாமுத்தூர் அருகே சென்னனுர் பகுதியில் ஒரு குடோன் எடுத்து அதில் சில மூட்டைகளில் ரசாயன பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். உடனே மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அந்த குடோனுக்கு விரைந்து சென்றனர். அங்கு மூட்டை மூட்டையாக ரசாயன பொருட்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளில் இருந்து மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் மூட்டையில் இருந்தது “பொட்டாசியம் குளோரைடு ” என்பதும் இது உரமாக பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பிளீச்சிங் பவுடர் மற்றும் சில வேதி பொருட்களுடன் சேர்ந்து வெடி பொருட்கள் இருப்பதாக கூறி மோசடியாக ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது .இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..