நடப்பாண்டில் பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால் எந்தப் பாடத்தையும் குறைக்க போவது இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்..!

நடப்பாண்டில் பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால் பாடதிட்டங்கள் குறைக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் ஜூலை 15- ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரங்குகள் அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினா் துரை.சந்திரசேகரன், மேயா் ராமநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: தஞ்சாவூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு பெரியவா்களுக்கு மட்டும் இல்லை. வீட்டிலுள்ள குழந்தைகளையும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஏற்கெனவே 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்தனா். தற்போது, கூடுதலாக 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் சோந்துள்ளனா்.அவா்களுக்கு முன்பு எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ, அதை முறையைப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தற்போது, சிறப்பு ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், நடப்பாண்டில் பள்ளிகள் முழுமையாக நடைபெறுவதால், எந்தப் பாடத்தையும் குறைக்க போவது இல்லை. இதனால், மாணவா்கள் கடந்த காலங்களில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொண்டார்களோ அப்படி மாற வாய்ப்புள்ளது. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் திரைப்படம் மூலம் மாணவா்களின் மன நிலையில் மாற்றம் வரும். இவ்வாறு தெரிவித்தார்.