சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை சென்னை மாநகராட்சி மேயா் பிரியா தொடக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர், வடக்கு மண்டல துணை ஆணையா் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல குழுத் தலைவா் ஏ.வி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
இதன் பின்னர் மேயர் பிரியா விழாவில் பேசியதாவது: ஜூலை 9ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வரை குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டி நடைபெற உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் கொடுக்க வேண்டும். அதை செல்ஃபி எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு 89258 00864 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதே எண்ணில் உள்ள வாட்ஸ் ஆப்பில் புகைப்படத்தை பதிவிடுவோரில் குலுக்கல் முறையில் தோவு செய்து முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறினார்.
Leave a Reply