கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி..!

சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.

கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள் திரளாக அரசு மருத்துவமனைக்கு வந்து, அவரை சந்திக்க முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், கே.பி.ராமலிங்கத்தை சந்திக்க வந்தவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, பாஜக தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த தொண்டர்களை போலீஸார் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர்.